Searching...
Sunday, March 29, 2015

13 மாநிலங்களில் மக்கள் தொகையை விட ஆதார் எண்கள் அதிகம் : அதிகாரிகள் அதிர்ச்சி

8:24 AM
புதுடெல்லி: நாடு முழுவதும் தற்போது நடைபெற்று வரும் ஆதார் அடையாள திட்டத்தில் 13 மாநிலங்களில் காணப்படும் மக்கள் தொகையை விட ஆதார் எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைக்கான பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் 90 சதவீதத்தை எட்டிவிட்டோம், 80 சதவீதத்தை எட்டிவிட்டோம் என்று அதிகாரிகள் அவ்வப்போது அறிவித்து வருகின்றனர். இது போதாது என்று மத்திய அரசு ஆதார் வேண்டும் என்று கூற, சுப்ரீம் கோர்ட் அவசியம் இல்லை என்று கூற மக்கள் தலையை பிய்த்துக் கொள்ளாத குறையாக குழம்பி போயுள்ளனர். இந்த குழப்பம் போதாது என்று ஏற்கனவே சமையல் சிலிண்டர் மானியம், தேசிய ஊரக வேலை திட்டத்தை ஆதாருடன் இணைப்பது என்றும் அரசு தனது பாணியில் வேலைகளை செய்து வருகிறது. இதற்கிடையில் தற்போது தற்போது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் மற்றும் செல்போனுடன் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதற்கெல்லாம் உச்சம் வைத்தாற்போல செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் ஆதார் பதியும் பணிகளில் 13 மாநிலங்களில் அங்குள்ள மக்கள் தொகையை விட ஆதார் எண் பதிவு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விபரத்தை விட கூடுதலாக அந்த மாநிலங்களில் ஆதார் அடையாள பதிவு இருப்பதாக அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். இதற்கு 2011க்கு பிறகு மாநிலங்களுக்கு இடையில் மக்கள் மத்தியில் நடைபெற்றுள்ள இடப்பெயர்ச்சியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உதாரணத்திற்கு கடந்த 2011ம் ஆண்டில் டெல்லியில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 வயது நிரம்பியவர்கள் ஒப்பிடும் போது 127.6 சதவீதம் ஆதார் பதிவாகியுள்ளது. அதே போல ஆந்திராவில் 113.7, இமாச்சல பிரதேசத்தில் 112.5, சிக்கிமில் 109.2, பஞ்சாபில் 109.1, கேரளாவில் 108.6, ஜார்கண்டில் 107.1, சண்டிகரில் 106.9, கோவாவில் 106.8, புதுச்சேரியில் 106.8, திரிபுராவில் 103.8, அரியானாவில் 103.5 சதவீதம் பதிவாகியுள்ளது. இதனையடுத்து புள்ளிவிவரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மீண்டும் ஒருமுறை வீடு வீடாக சென்று மக்கள் தொகையை சரிபார்த்து அதனை தரப்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவித்துள்ளனர். Source: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=138460

0 comments:

Post a Comment